பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 4 பேர் சாவு சுத்திகரிப்பு பிரிவு கட்டிடம் தரைமட்டம்; விசாரணைக்கு குமாரசாமி உத்தரவு

பாகல்கோட்டையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து சுத்தி கரிப்பு பிரிவு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், 4 பேர் பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-12-16 23:15 GMT
பெங்களூரு,

பாகல்கோட்டை மாவட்டம் முதோல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குளலி கிராமத்தில் சர்க்கரை ஆலை உள்ளது.

இந்த ஆலை பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான முருகேஷ் நிரானிக்கு சொந்தமானதாகும். நேற்று மதியம் ஆலையில் சுத்திகரிப்பு பிரிவில் உள்ள பெரிய அளவிலான கொதிகலன் அருகே நின்று 8 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையில் நின்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மதியம் 1 மணியளவில் திடீரென்று பலத்த சத்தத்துடன் கொதிகலன் வெடித்து சிதறியது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதற்கிடையில், கொதி கலன் வெடித்ததில் சர்க்கரை ஆலையின் சுத்தி கரிப்பு பிரிவின் கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளர்கள் உயிருக்கு போராடினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் முதோல் போலீசார் விரைந்து வந்து இடி பாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள். மேலும் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள். பின்னர் இடிபாடுகளுக்குள் இருந்து 3 பேரின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. முன்னதாக இதுபற்றி அறிந்ததும் பாகல்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யாந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் பெயர் சரணபசப்பா, எடஹள்ளி கிராமத்தை சேர்ந்த சிவானந்த வீரய்யா நவ்நாத்(வயது 40), குளலி கிராமத்தை சேர்ந்த நாகப்பா பாலப்பா டொம்பாரா(38), நவலகிரி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் சங்கர் டவுன்ஷெட்டி(32) என்று தெரியவந்தது. மேலும் மனோஜ்(9), மோகன்சிங்(35) உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சர்க்கரை ஆலையில் உள்ள சுத்திகரிப்பு பிரிவில் உள்ள மீத்தேன் கியாஸ் கசிந்து கொதிகலன் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாகல்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்ததன் காரணமாக 4 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்க்கரை ஆலையின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் கொதிகலன் வெடித்ததால் விபத்து நடந்ததாக கூறியுள்ளனர். என்ன காரணத்திற்காக கொதிகலன் வெடித்தது என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரிப்பதற்காக பெலகாவியில் இருந்து நிபுணர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்பு தான் கொதிகலன் வெடித்ததற்கான சரியான காரணம் தெரியவரும்.

ஆலையின் ஒரு பகுதி கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்து தரை மட்டமாகி உள்ளது. மற்றொரு பகுதியில் உள்ள கட்டிடம் இடியவில்லை. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள். இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து முன்னாள் மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் இந்த ஆலையை 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்தது இல்லை. கொதிகலன் வெடித்து 4 பேர் உயிர் இழந்திருப்பதாக ஆலையில் வேலை செய்யும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்,’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து முதோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்க்கரை ஆலையில் கொதிகலன் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் பாகல்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாகல்கோட்டை மாவட்டம் முேதால் தாலுகாவில் ஒரு சர்க்கரை ஆலையில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் மரணம் அடைந்ததாக வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டை தொடர்பு கொண்டு, தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளேன்.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பி, காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறேன். மரணம் அடைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்