புஞ்சைபுளியம்பட்டி அருகே கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

புஞ்சைபுளியம்பட்டி அருகே பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. அந்த பகுதியில் நடந்து வரும் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2018-12-16 23:48 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூரில் பால் கூட்டுறவு சங்க அலுவலகமும், ரே‌ஷன் கடையும் அருகருகே உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை கீழே தூக்கிப் போட்டு உடைத்து அதில், வைக்கப்பட்டு இருந்து ரூ.7 ஆயிரத்தை எடுத்தனர். மேலும், பால் கூட்டுறவு சங்கத்தின் அருகே உள்ள ரே‌ஷன் கடையின் பூட்டையும் உடைத்து உள்ளனர். பின்னர் அங்கு பணம் எதுவும் உள்ளதா? என்று தேடினார்கள். ஆனால் அங்கு பணம் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்லும் போது ரே‌ஷன் கடை பூட்டு மற்றும் பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திருட்டு நடந்த பால் கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் ரே‌ஷன் கடையை பார்வையிட்டனர். மேலும், சங்க ஊழியர்களும் அங்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்த பீரோவை சோதனை செய்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்து ரூ.7 ஆயிரத்தை காணவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்லூர் மாதேஸ்வரன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை தூக்கி வெளியே கொண்டு வந்து அதில் இருந்த பூஜை பொருட்களை திருடிச்சென்றனர். இதேபோல் நல்லூர் பகுதியை சேர்ந்த சம்பா மூர்த்தி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்று உள்ளனர். நல்லூரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்