அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் - பா.ஜ.க. வலியுறுத்தல்

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

Update: 2018-12-17 01:31 GMT
திருப்பத்தூர்,

கீழச்சிவல்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். திருப்பத்தூர் ஒன்றிய தலைவர் அடைக்கப்பன் என்ற செல்வம், சுமங்கலி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் செந்தில்ஜி, வக்கீல் முருகேசன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் அஜய் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மதுரை-தஞ்சாவூர் வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட 32 அரசு பஸ்கள் கீழச்சிவல்பட்டி ஊருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழச்சிவல்பட்டி கோவில் அருகில் இருந்து சுமார் 1 கி.மீட்டருக்குள் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அம்மன் சன்னதி வீதி, எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி முதல் அச்சரம்பட்டி வரையிலான சாலை, மற்றும் இளையாத்தங்குடி முதல் சந்திரன்பட்டி வரையிலான சாலையை உடனே செப்பனிட வேண்டும். ஒரு காலத்தில் நகரத்தார் அமைத்த போர்டு மருத்துவமனையை, தற்போது ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

ஒதுக்கப்பட்ட துணை மின்நிலைய பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஊராட்சியை சிறப்பு பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். என்.புதூர்-திருப்பத்தூர் பஸ்நிலையம், மற்றும் கோர்ட்டு வழியாக சுமார் ரூ.13 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணியை முறையாக உரிய தரத்துடன் பணி மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசின் இலவச ஆடு, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு திட்டம், கழிப்பறை திட்டங்களில் முறைகேடு நடைபெறாமல் பயனாளிகள் பயனடைய வேண்டும்.

ஆதரவற்ற முதியோர், விதவைகள் கோரும் உதவித்தொகை மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்தி, தகுதியானவர்களுக்கு உடன் உதவித்தொகை வழங்க வேண்டும். காலியாகவுள்ள மின்பணியாளர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் சட்டமன்ற பொறுப்பாளர் இலுப்பகுடி நாராயணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்