கோவில்பட்டி அருகே தந்தை இறந்த நாளில் வாலிபர் தற்கொலை கிணற்றில் குதித்து சோக முடிவு

கோவில்பட்டி அருகே தந்தை இறந்த நாளில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர், தந்தை தற்கொலை செய்த கிணற்றிலேயே குதித்து உயிரை மாய்த்து கொண்டார்.

Update: 2018-12-17 22:15 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவன். விவசாயி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய மகன் ஞானசுந்தர் (வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்து உள்ளார். இவர் பல்வேறு இடங்களில் வேலைக்காக முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வேலை கிடைக்காததால், தன்னுடைய குடும்பத்தினருக்கு உதவியாக மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்தார்.

இந்த நிலையில் பரமசிவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. எனவே அவரது வீட்டில் குடும்பத்தினர் நினைவு தினத்துக்கான ஏற்பாடு செய்தனர். தந்தை இறந்த துக்கத்தில் மிகவும் மனமுடைந்து காணப்பட்ட ஞானசுந்தர் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் தனது தந்தை தற்கொலை செய்த அதே கிணற்றில் குதித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார். நீண்ட நேரமாகியும் ஞானசுந்தர் தனது வீட்டுக்கு திரும்பி செல்லாததால் அவரை உறவினர்கள் தேடினர். நேற்று பரமசிவன் தற்கொலை செய்த அதே கிணற்றில் ஞானசுந்தர் பிணமாக மிதந்ததைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அவருடைய உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த ஞானசுந்தருக்கு பேச்சியம்மாள் என்ற தாயாரும், கற்பகவல்லி (17) என்ற தங்கையும் உள்ளனர்.

தந்தை இறந்த நாளில் மகனும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்