‘கஜா’ புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் விஷம் குடித்த விவசாயி சாவு; மனைவி உயிர் ஊசல்

வேதாரண்யம் அருகே கஜா புயலில் தென்னை மரங்கள் சாய்ந்ததால் மன வேதனையில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-12-17 22:15 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 51). விவசாயி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுடைய மகன் மணிவண்ணன்(29). இவர் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் ஊருக்கு வந்துள்ளார். மருதமுத்து தம்பதியினர், புஷ்பவனத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான தென்னந் தோப்பில் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த மாதம் வீசிய கஜா புயல் மருதமுத்துவின் தென்னந்தோப்பையும், வீட்டையும் சூறையாடியது. புயலுக்கு தோப்பில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடும் சேதமடைந்தது. இதனால் கணவன், மனைவியும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் வீட்டையும், தென்னை மரங்களையும் இழந்து விட்டு இனிமேல் என்ன செய்யப்போகிறோம். தங்களது வாழ்வாதாரத்திற்கு என்ன வழி என்று யோசித்தனர். அதனால் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்து இருவரும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.

சிறிது நேரம் கழித்து வெளியில் சென்று இருந்த மணிவண்ணன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தனது தாயும், தந்தையும் மயங்கி கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மருதமுத்து ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பார்வதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்