குட்கா ஊழல் வழக்கு: தஞ்சை அ.ம.மு.க. பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் வாங்கி கொடுத்த தஞ்சையை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் 2½ மணி நேரம் சோதனை நடத்தினர்.

Update: 2018-12-17 23:15 GMT
தஞ்சாவூர்,

ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்கா ஊழல் வழக்கில் தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 9 மணி நேரம் நடந்தது.

குட்கா ஊழல் வழக்கில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி 3-வது தெருவில் வசித்து வரும் வக்கீல் வேலு கார்த்திகேயன் என்பவர் ஜாமீன் வாங்கி கொடுத்தார்.

இது குறித்து அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை 7.30 மணியளவில் தஞ்சை மாதாக்கோட்டை வங்கி ஊழியர் காலனியில் உள்ள வக்கீல் வேலுகார்த்திகேயன் வீட்டுக்கு வந்து தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த வேலுகார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் என்ன கூறினார் என்ற தகவல் தெரியவில்லை.

2½ மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வக்கீல் வேலு கார்த்திகேயன் வீட்டில் இருந்து சில ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது. வக்கீல் வேலு கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல் பிரிவு மாநில செயலாளராக உள்ளார்.

குட்கா ஊழல் வழக்கில் வக்கீல் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்