திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யக்கோரி சாலை மறியல்

திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யக்கோரி நாகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-17 23:00 GMT
நாகப்பட்டினம்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை அருகே நாகூர் மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். நாகூர் நகர செயலாளர் சண்முகம், திருமருகல் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சுரேஷ், ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் வைரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது எச்.ராஜாவை உடனே கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை, நாகையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த சாலை மறியலால் நாகை-நாகூர் மெயின் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்