கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி நூதன போராட்டம்

கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்தவர்களை கைது செய்யக்கோரி நூதன போராட்டம் நடந்தது. ராஜா, ராணி வேடம் அணிந்து வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-17 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கையில் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் வந்தனர். மேல் சட்டை அணியாமல் இருந்த அய்யாக்கண்ணு தனது உடல் மற்றும் நெற்றியில் பட்டை நாமம் வரைந்து இருந்தார்.

அவருடன் ஒரு விவசாயி ராஜா போல் அலங்கார உடை அணிந்தும், இன்னொரு பெண் ராணி போல் ஏராளமான நகைகள் அணிந்து தலையில் கிரீடம் சூட்டி இருந்தார். ராஜாவும், ராணியும் கையில் வைத்திருந்த சாட்டையால் விவசாயிகளை அடிப்பது போல் அவர்கள் நடித்து காட்டினார்கள். மேலும் ஒரு பெண் உள்பட சில விவசாயிகள் தங்களது கைகளில் தூக்கு கயிறையும் வைத்து இருந்தனர்.

இந்த கோலத்துடன் கலெக்டரை சந்திப்பதற்காக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த அறைக்குள் விவசாயிகள் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை வாசலில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அவர்கள் வாசல் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர். லால்குடி அருகே உள்ள காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 விவசாயிகளுக்கு கடன் வழங்காமலேயே கடன் வழங்கியதாக பொய்யான ஆவணங்கள் தயாரித்து ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டு உள்ளது.

இந்த மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியர் உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தினால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் மோசடி நபர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்தால் தான் இந்த இடத்தை விட்டு செல்வோம். இல்லையேல் காலவரையின்றி காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றனர். இதனால் வருவாய் அதிகாரி சாந்தி உடனடியாக திரும்பி சென்று விட்டார்.

இதையடுத்து பிற்பகல் 2 மணி அளவில் கலெக்டரை சந்திப்பதற்காக அய்யாக்கண்ணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கலெக்டரிடம் கோரிக்கை மனுவை விவசாயிகள் கொடுத்தார்கள். இந்த மோசடி தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ராஜாமணி கூறினார். அப்போது அய்யாக்கண்ணு, மோசடி நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார். இதனால் அவருக்கும், கலெக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் அளித்த உறுதியை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்