சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்ய மெரினா கடற்கரையில் தினமும் நடைப்பயிற்சி செல்ல வேண்டும் மாநகராட்சி ஆணையருக்கு, ஐகோர்ட்டு அறிவுரை

கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய போலீஸ் கமிஷனருடன், சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் காலையில் மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.

Update: 2018-12-17 23:15 GMT
சென்னை,

ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு கடந்த மாதம் விசாரித்தது. அப்போது, மெரினா கடற்கரை அசுத்தமாக உள்ளதாக தெரிவித்ததுடன், மெரினாவை சுத்தப்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆஜராகி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆணையர் நடைப்பயிற்சி

அதில், ‘மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த எந்திரங்கள் பல வாங்கப்பட்டுள்ளன. கடற்கரையை சுத்தப்படுத்த காலை 6 மணி, பிற்பகல் 2 மணி, இரவு 10 மணி என்று 3 ‘ஷிப்டு’களில் துப்புரவு பணியில் 250 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் கடை அமைக்க 1,544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதை படித்துப்பார்த்த நீதிபதிகள், வருகிற புத்தாண்டை சுத்தமான மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கொண்டாடும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி முறையாக நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருடன், சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் காலையில் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.

காலஅவகாசம்

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்வோர் வைத்துள்ள 7 சங்கங்களையும் இந்த வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கின்றோம். இவர்கள் அனைவரும் மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க உறுதி அளித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்.

மெரினா கடற்கரையில் மீன் வியாபாரம் செய்வோரது விவரங்களை கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே கேட்டோம். ஆனால் மனுதாரர் தரப்பு வக்கீல் மீனவர்கள் சங்கம் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் கேட்கிறார். அவருக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு எவ்வளவு தொகை தமிழக அரசு வழங்கியுள்ளது? என்ற விவரங்களை அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்