பயணிகள் நிழற்குடையில் எழுதப்பட்டிருந்த குரு பெயர் அழிப்பு மர்மநபர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் மறியல்

பயணிகள் நிழற்குடையில் எழுதப்பட்டிருந்த மறைந்த குருவின் பெயரை அழித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-17 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் உள்ள வாரச்சந்தை அருகே கடந்த 2014-15 ஆண்டு அப்போதைய ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.வாக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த நிழற்குடையில், காடுவெட்டி குருவின் பெயர் எழுதப்பட்டு இருந் தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் குருவின் பெயரை அழித்தனர். இதனை நேற்று காலை பார்த்த பா.ம.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பா.ம.க.வினர் ஒன்று திரண்டு விருத்தாச்சலம்- ஜெயங்கொண்டம் சாலையில் வாரச்சந்தை பயணிகள் நிழற்குடை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் குருவின் பெயரை அழித்த மர்மநபர்களை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், சம்பந்தப்பட்ட நபர்களை விரைவில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்