கர்நாடக சட்டசபை கூட்டத்தின்போது செல்போனில் பெண்ணின் படத்தை பார்த்து ரசித்த எம்.எல்.ஏ. தனியார் தொலைக்காட்சிகளில் வீடியோ வெளியானதால் பரபரப்பு

கர்நாடக சட்டசபை கூட்டத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் எம்.எல்.ஏ. தனது செல்போனில் பெண்ணின் படத்தை பார்த்து ரசித்த வீடியோ தனியார் தொலைக்காட்சிகளில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-17 21:59 GMT
பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்தபோது, சட்டசபை கூட்டத்தில் 3 மந்திரிகள் தங்களின் செல்போனில் ஆபாச படம் பார்த்தனர். இது தொடர்பான வீடியோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி ெபரும் பரபரப்ைப ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த 3 மந்திரிகளும் உடனடியாக பதவியை ராஜினாமா செய்தனர்.

அதே போல் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் செல்போனில் பெண்களின் படத்தை பார்த்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சட்டசபைக்குள் செல்போனை கொண்டுவர வேண்டாம் என்று சபாநாயகர் அறிவுறுத்தினார்.

பெங்களூரு விதான சவுதாவில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு வெளியே எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களை வைக்க மாடம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆயினும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்களின் செல்போன்களை சட்டசபைக்குள் கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண சவுதாவில் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தின்போது, சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் எம்.எல்.ஏ., தனது செல்போனில் பெண்ணின் படம் ஒன்றை பார்த்து ரசித்தபடி இருந்தார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “எனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக பெண் பார்த்து வருகிறோம். அந்த அடிப்படையில் தான் நான் சட்டசபையில் எனது செல்போனில் ஒரு பெண்ணின் படத்தை பார்த்தேன். இதை தவறாக எண்ண வேண்டாம். உள்நோக்கம் எதுவும் இல்லை. நான் அதுபோன்ற ஆள் இல்லை” என்றார்.

மேலும் செய்திகள்