பெய்ட்டி புயல் எதிரொலி: 6-வது நாளாக மீன்பிடி தொழில் முடங்கியது - கடல் சீற்றத்தால் மீனவர்கள் அச்சம்

பெய்ட்டி புயல் காரணமாக 6-வது நாளாக மீன்பிடி தொழில் முடங்கி இருக்கிறது. மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-12-17 23:15 GMT
கடலூர், 

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. பெய்ட்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இடை இடையே லேசான குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இரவில் கடும் குளிர் வாட்டி வதைத்தது. அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவும் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் குளிரால் கடும் அவதிப்பட்டனர்.

கடலூரில் நேற்று அதிகாலையில் பனிப்பொழிவு இருந்தது. பின்னர் காலை 7 மணியளவில் வெயில் அடிக்க தொடங்கியது. பெய்ட்டி புயல் பிற்பகலில் கரையை கடக்கும் என்பதால் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வெயில் அடித்தது.

காற்று, மழை இல்லை என்றாலும் கடலூரில் கடந்த 2 தினங்களாக கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனால் ஏற்பட்ட மண் அரிப்பில் தேவனாம்பட்டினம் கரைப்பகுதியில் பதிக்கப்பட்டு இருந்த கற்கள் சரிந்து போனது. இதனால் எந்த நேரமும், கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தை விட பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதனால் கரையோரம் வசித்து வரும் மீனவர்கள் அச்சமடைந்தனர். கடலூர் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வரும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த கடல் அலைகள் கரையை நோக்கி சீறி பாய்ந்தது. இதனால் நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் சில்வர் பீச்சுக்கு செல்ல போலீசார் தடை விதித்தனர். அவ்வப்போது ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடுத்து வந்தனர்.

பெய்ட்டி புயலால் கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 6-வது நாளாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் முக்கிய மீன்பிடி தளமாக இருந்து வரும் கடலூர் துறைமுகம் வெறிச்சோடிய நிலையில் கிடந்தது. இதேபோல் பரங்கிப்பேட்டை கடலோர பகுதியான முடசல் ஓடை, அன்னங்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று 6-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் அனைத்தும் கரையோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெய்ட்டி புயலால் வடகடலோர மாவட்டங்களுக்கு மழை கிடைக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் மழை எதையும் கொடுக்காமல் ஏமாற்றியே சென்று இருக்கிறது. மாறாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்களின் வருவாயை தான் புயல் முடக்கி போட்டுவிட்டு சென்று இருக்கிறது. மீன்பிடி தொழில் பாதிப்பால் மீனவர்கள் அதை சார்ந்துள்ள குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்