கவுரவ விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்; தி.மு.க. வலியுறுத்தல்

கவுரவ விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

Update: 2018-12-17 22:51 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி அரசு சார்பில் 8 கலை அறிவியல் கல்லூரிகளும், 2 பட்டமேற்படிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அதில் பணியாற்றுவதற்கான உதவி மற்றும் துணை பேராசிரியர்களை விதிமுறைப்படி யு.பி.எஸ்.சி. தான் நிரப்ப வேண்டும். அப்படி யு.பி.எஸ்.சி.யால் தேர்வு செய்யப்படுகின்ற உதவிப்பேராசிரியர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

இதனால் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியாக உள்ள புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவர்கள் நூற்றுக்கணக்கில் புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 2016–17–ம் ஆண்டில் யு.பி.எஸ்.சி. ஆல் தேர்வு செய்யப்பட்ட 102 உதவி பேராசிரியர்களில் 2 பேர் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தவர். வெளிமாநிலத்து பேராசிரியர்களால் உள்ளூர் மாணவர்களின் மொழிப்பிரச்சினையை சமாளிக்க இயலாமல் மாணவர்களின் கல்வித்தரம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுவை அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்கள் அடிப்படையில் நிரப்ப கடந்த அக்டோபர் மாதம் உயர்கல்வி இயக்குனரகம் அறிவித்தது. மேலும் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் 69 பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் முதல் பணியில் அமர்த்தப்பட்டனர். தற்பொழுது இதே பணிகளை உதவி பேராசிரியர் பெயரில் அகில இந்திய அளவில் நிரப்பிட புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. கடந்த நவம்பர் மாதத்தில் பணிக்கு சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தனியார் கல்லூரிகளில் நல்ல சம்பளத்தில் வேலை செய்தவர்கள். அவர்கள் தங்கள் பணிகளை விட்டு விட்டு அரசை நம்பி கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு வந்தவர்கள்.

தற்போது அரசின் அறிவிப்பு என்பது புதுச்சேரியை சேர்ந்த 69 நபரை வேலையை விட்டு வீட்டிற்கு அனுப்புகின்ற செயலாகும். புதுச்சேரி அரசை பொறுத்தவரை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது கடமையாகும். ஆனால் பணியில் இருக்கின்றவர்களையும் வீட்டிற்கு அனுப்புகின்ற இந்த செயல் ஏற்புடையதல்ல. முன்பு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் பின்பு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் 69 கவுரவ விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி தொகுப்பூதியமாக ரூ.25 ஆயிரம் வழங்கி அவர்களின் பணிகளை பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் மொழிப்பிரச்சினையில் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை உள்ளூர் ஆசிரியர்களின் பணி மூலம் தவிர்த்து கல்வியில் வளர்ச்சி காண முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்