சேலத்தில், பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சேலத்தில் பட்டா கேட்டு, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2018-12-17 22:15 GMT
சேலம், 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில் சேலம் பழைய சூரமங்கலம் மஜீத் தெருவை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், ‘எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்டவை கூறப்பட்டிருந்தது.

சேலம் சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற பெண், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தார். அதில், ‘நான் பிரசவத்திற்காக எனது பகுதியில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் உறவினர்கள் என்னை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென எனது குழந்தை இறந்து விட்டது. இதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததே காரணம் ஆகும். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்