கஜா புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்ணாவிரதம்

கஜா புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் 34 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Update: 2018-12-18 22:45 GMT
தஞ்சாவூர்,

கஜா புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்காததை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் முத்துகுமரன், மணிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம் தொடங்கி வைத்தார்.

இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார், தலைமை கழக பேச்சாளர் விடுதலைவேந்தன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


உண்ணாவிரதத்தில், கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கோரிய நிவாரணத் தொகை ரூ.15 ஆயிரம் கோடியை மத்தியஅரசு உடனே வழங்க வேண்டும். புயலால் சேதம் அடைந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள், தொகுப்பு வீடுகள் அனைத்துக்கும் முழு நிவாரணம் வழங்க வேண்டும்.

1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை குடிமனை பட்டா வழங்கி செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாகுபாடு இன்றி நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்ய வேண்டும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சமும், கரும்பு ஏக்கருக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், மாமரம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.


மீனவர்களின் பாதிக்கப்பட்ட படகுகள், வலைகளுக்கு பதிலாக புதிதாக வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத்தை மாவட்ட செயலாளர் பாரதி முடித்து வைத்து பேசினார். முடிவில் மாநகர துணை செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.


தஞ்சை மாவட்டத்தில் பாப்பாநாடு, திருப்பனந்தாள், கும்பகோணம் காந்திபூங்கா, திருவிடைமருதூர், மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவையாறு, பூதலூர், திருவோணம், கரம்பயம், அதிராம்பட்டினம், திருச்சிற்றம்பலம், அம்மாப்பேட்டை உள்பட 34 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் தி.மு.க.வை சேர்ந்த அன்பழகன் எம்.எல்.ஏ.வும், திருவிடைமருதூரில் கோவி.செழியன் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்