கரும்பு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - தேனி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

கரும்பு தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-12-18 22:30 GMT
தேனி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 43). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராசு என்ற சுப்பையா (வயது 57). தோட்ட தொழிலாளி. கடந்த 2013-ம் ஆண்டு கரும்பு தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முத்துகிருஷ்ணனுக்கும், ராசுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராசு, மண்வெட்டியால் முத்துகிருஷ்ணனை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடலை, தண்ணீர் செல்லும் வாய்க்கால் பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து விட்டார்.

இதற்கிடையே முத்துகிருஷ்ணனை காணாமல் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இருப்பினும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சந்தேகத்தின் பேரில் ராசுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துகிருஷ்ணனை கொலை செய்து புதைத்து விட்டதாக அவர் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை தோண்டி எடுத்தனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடினார். வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு வழங்கினார். முத்துகிருஷ்ணனை கொலை செய்த குற்றத்துக்காக ராசுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது. கொலை செய்து பிணத்தை மறைத்த குற்றத்துக்காக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ராசுவை, போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்