புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மின்சாரம் இல்லை குழந்தையை தரையில் படுக்க வைத்து பொதுமக்கள் சாலை மறியல்

புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மின்சாரம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மாங்காடு பகுதி மக்கள் நேற்று குழந்தையை தரையில் படுக்க வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களும் பங்கேற்றனர்.

Update: 2018-12-18 23:00 GMT
கீரமங்கலம்,

கடந்த மாதம் 16-ந் தேதி தமிழகத்தை கஜா புயல் தாக்கியது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்தது. மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள், மரங்கள், வாழைகள் அடியோடு சாய்ந்தன. இதனால், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இருந்தாலும், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.

மாவட்டத்தில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் முற்றிலும் தடைபட்டது. தமிழக அரசு மற்றும் பிற மாநில மின் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்களை சீரமைத்ததன் காரணமாக பகுதி, பகுதியாக மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மின்கம்பங்கள் பற்றாக்குறை காரணமாக சில இடங்களில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், புயல் தாக்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் பல கிராமங்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படாத நிலையே நீடிக்கிறது.

அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு ஊராட்சி வாணியர் தெருவில் உள்ள 70 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு புயல் தாக்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. இதுகுறித்து வடகாடு மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மாங்காடு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு கைக்குழந்தையை சாலையில் படுக்க வைத்திருந்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். அப்போது, அரையாண்டு தேர்வுக்கு செல்ல வேண்டிய மாணவர் ஒருவர், பள்ளி சீருடையுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் அன்றைய தேர்வுக்கான புத்தகத்தை சாலையில் அமர்ந்து படித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு மின் வாரிய ஊழியர்கள் சாலை மறியல் செய்த பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்து அவர்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரம் வெளியிட்டது யார்?, இதுபோன்ற தவறான தகவலை கொடுத்த அதிகாரிகள் யார்? என்று கோஷம் எழுப்பினர். அதற்கு, மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்து மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்