சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை மறித்தது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை மறித்தது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2018-12-18 23:00 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் தேவனூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினர் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்வதற்காக ஒரு பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரரான வைத்திலிங்கம்(வயது 45) தனக்கு சொந்தமான நிலத்தையும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையையும் சேர்த்து வேலி அமைத்தார். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு வைத்திலிங்கத்திற்கு சாதகமாக வந்ததை அடுத்து வைத்திலிங்கம் மீண்டும் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை மறித்து சுற்றி வேலி அமைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் இது குறித்து நடவடிக்கை எடுக்காத ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று பழங்குடி இருளர் பேரவை மாநில தலைவர் இருளபூசெல்வகுமார் தலைமையில், தேவனூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடி இருளர் மக்கள், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஒன்று திரண்ட னர். இதை அறிந்த ஆண்டி மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி (பொறுப்பு) தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை தடுத்து நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதற்கு அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரி வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என கூறினர்.

இதையடுத்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு நலன் கருதி சுமுக முடிவு எடுக்கப்பட்டது. அதில், ஆண்டிமடம் வட்டம் தேவனூர் கிராம பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதையில் தடையேதும் ஏற்படுத்தக்கூடாது. ஜெயங்கொண்டம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆட்சேபித்து ஊரக வளர்ச்சித்துறையினரால் ஜெயங்கொண்டம் கிளை கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அமைதி பேச்சுவார்த்தையில் ஆண்டிமடம் வட்டாட்சியர் கோவிந்தராஜ், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்