வாகனத்தில் முந்தி செல்வதில் தகராறு: பெண் போலீசின் கணவர், டிரைவர் மேம்பாலத்தில் கட்டிப்புரண்டு சண்டை சேலத்தில் பரபரப்பு

சேலத்தில், வாகனத்தில் சென்றபோது, முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில் பெண் போலீசின் கணவர், கார் டிரைவர் மேம்பாலத்தில் கட்டிப்புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-18 23:00 GMT
சேலம்,

சேலம் அருகே உள்ள தாதகாப்பட்டி சண்முகாநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 52). கார் டிரைவர். இவர் நேற்று காலை கந்தம்பட்டி மேம்பால பகுதியில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது அவரது காருக்கு பின்னால் கந்தம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த காசிமாயாண்டி (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவரின் கணவர் ஆவார். இந்த நிலையில் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயன்றனர். அப்போது பெரியசாமி காரை ஓட்டியவாறு காசிமாயாண்டியை பார்த்து ‘ஏன் இவ்வளவு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்கிறீர்கள்?’ என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறிது தூரம் சென்றதும் சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா மேம்பாலத்தில் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

பின்னர் காரில் இருந்து இறங்கிய பெரியசாமிக்கும், காசிமாயாண்டிக்கும் இடையே யார் முந்தி செல்வது? என்பது தொடர்பாக மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே திடீரென்று இருவரும் மேம்பாலத்தின் நடுவில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையில் காசிமாயாண்டி, தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து உள்ளார். இது குறித்து பெண் போலீஸ், அங்கு பணியில் இருந்த மற்ற போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இந்த நிலையில் கார் டிரைவர் பெரியசாமி, சேலம் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரையிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெண் போலீசின் கணவர் காசிமாயாண்டி என்னை தாக்கியது மட்டுமின்றி எனது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட அவர் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தக்கோரி சூரமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படும் ஏ.வி.ஆர்.ரவுண்டானா மேம்பாலத்தில் பெண் போலீசின் கணவர்- கார் டிரைவர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்களது சண்டையால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்