மாணவிகளிடம் ஆபாச பேச்சு: ‘போக்சோ’ சட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

பழனியில், மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-19 22:00 GMT
பழனி, 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்து சட்டப்பணிகள் ஆணைக்குழு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி பழனியை அடுத்த கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற இந்த குழுவினர், மாணவிகளிடம் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என விசாரித்தனர்.

அப்போது, அதே பள்ளியில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றும் பழனி முல்லைநகரை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (வயது 45) என்பவர் தங்களிடம் ஆபாசமாக பேசுவதாக மாணவிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை தயாரித்து பழனி சப்- கோர்ட்டில் சமர்ப்பித்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி பழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு, கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று அந்த பள்ளிக்கு சென்ற போலீசார், ஸ்டீபன்ராஜிடமும், மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில் ஸ்டீபன்ராஜ், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்