குறைவான கூலி வழங்குவதாக கூறி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் - விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

குறைவான கூலி வழங்குவதாக கூறி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் விக்கிரவாண்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-20 22:30 GMT
விழுப்புரம், 

விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவி என்ற கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்குவதில் பாகுபாடு பார்ப்பதாகவும், வேலை செய்தும் வருகை பதிவேட்டில் பதியாமல் விடுவதும் மற்றும் செய்த வேலைக்கு குறைந்த சம்பளம் வழங்குவதாகவும் கூறி நேற்று காலை 7.45 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொரவி கிராம மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வழுதாவூர்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், பணி செய்பவர்கள் அரசு குறிப்பிட்டுள்ள அளவுக்கு வேலை அளவு இருக்க வேண்டும், செய்யும் வேலைக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும். பணி செய்பவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தகுந்த பொறுப்பாளரிடம் தங்களது பெயரை பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாமல் பணி செய்தால் வருகை பதிவு செய்யப்பட மாட்டாது என்று கூறி உரிய விளக்கமளித்தனர். இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் சமாதானம் அடைந்து தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு காலை 8.15 மணியளவில் போக்குவரத்து சீரானது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் செய்திகள்