தேனி அருகே பரபரப்பு மணல் அள்ளுவதை தடுத்த ஆர்.டி.ஓ.வுக்கு கொலை மிரட்டல் - 2 பேர் சிக்கினர்

தேனி அருகே மணல் அள்ளுவதை தடுத்த ஆர்.டி.ஓ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-20 22:15 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்பேரில், பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா தேனி அருகே கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி, கோனாம்பட்டி, கோபால்புரம் ஆகிய இடங் களில் மணல் அள்ளுவதை தடுப்பதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார். பள்ளப்பட்டி வைகை ஆற்றங்கரை பகுதியில் அவர் தனது காரில் ரோந்து சென்று கொண்டு இருந்தபோது, அவரை பின்தொடர்ந்து ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 2 பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் ஆர்.டி.ஓ.வை பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு ஆர்.டி.ஓ. தகவல் கொடுத்தார். இதனால், காரில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தேனி புறவழிச்சாலையில் அன்னஞ்சி விலக்கு நோக்கி அந்த கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையிலான போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த 2 பேரையும் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவர்கள் பள்ளப்பட்டியை சேர்ந்த மயில்ராஜ் (வயது 37), செல்வக்குமார் (35) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. ஜெயப்பிரிதா பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் (353), கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து மயில்ராஜ், செல்வக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்