விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-20 22:00 GMT
பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி இரவு அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க செல்போனில் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், பழனியிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து மர்மநபர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணுடன் பழனி அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரணை செய்தனர். அதில் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் பதிவு எண், செல்போனை பறிகொடுத்த பழனி கூறிய எண் என்பது தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், சைதாப்பேட்டையை சேர்ந்த அசாருதீன் (32), மடிப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்பிரபு (26) என்பதும், இவர்கள், கல்லூரி மாணவர் பழனி மட்டுமின்றி விருகம்பாக்கம் பகுதியில் தனியாக நடந்து சென்ற பலரிடம் செல்போனை பறித்துச் சென்றது தெரிந்தது.

2 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார்சைக்கிள், ஒரு செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்