திண்டுக்கல்லில் பெண் டாக்டரிடம் கத்தி முனையில் நகை-பணம் பறிப்பு

திண்டுக்கல்லில் பெண் டாக்டரிடம் கத்தி முனையில் நகை, பணம் பறித்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-12-21 22:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர் டாக்டர் மீனாள் (வயது 70). இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டு முன்பு மீனாள் தனியாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கார் அவர் அருகே வந்து நின்றது. அந்த காரில் 4 பேர் அமர்ந்து இருந்தனர். அதில் இருந்து இறங்கிய 2 பேர் முகவரி கேட்பது போல் மீனாளின் அருகில் வந்தனர். பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி மீனாளை வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அப்போது மீனாள் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் கம்மல் ஆகியவற்றை பறித்தனர். அதையடுத்து பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் எடுத்து கொண்டு காரில் தப்பி விட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் மீனாள் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செழியன், வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மீனாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு நகை, பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் டாக்டரை கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்