ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை தூக்கத்தில் இருந்தவரிடம் மர்ம நபர் கைவரிசை

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தூக்கத்தில் இருந்தவரிடம் மர்மநபர் கைவரிசை காட்டினார்.

Update: 2018-12-22 22:45 GMT
நாகர்கோவில், 

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வேல்வார் கோட்டையை சேர்ந்தவர் ஜான் வினோத்காந்த் (வயது 47). இவர் வேல்வார்கோட்டை அருகில் உள்ள கன்னிவாடி பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயந்தி (42).

ஜான் வினோத்காந்தின் உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று கேரள மாநிலம் புனலூரில் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜான் வினோத்காந்த் தனது மனைவி ஜெயந்தி, மகள் பிரீத்தி (12) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை-புனலூர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 3 பேரும் பயணம் செய்தனர்.


அப்போது ஜெயந்தி ஒரு கைப்பை வைத்திருந்தார். அதில் தங்க சங்கிலி, வளையல், மோதிரம் என மொத்தம் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை இருந்தது. நள்ளிரவில் அவர்கள் அயர்ந்து தூங்கினர்.

ரெயில் நாங்குநேரி அருகே வந்த போது கண்விழித்த ஜெயந்தி தனது தலைக்கு அருகில் வைத்திருந்த கைப்பையை பார்த்தார். ஆனால் அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஜான் வினோத்காந்தை எழுப்பி கூறினார். அவரும் எழுந்து அந்த பெட்டி முழுவதும் தேடி பார்த்தார், கைப்பை கிடைக்கவில்லை. ஜான் வினோத்காந்த் மற்றும் அவருடைய மனைவி அயர்ந்து தூங்குவதை நோட்டமிட்ட மர்ம நபர் கைப்பையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதற்கிடையே ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனே ஜான் வினோத்காந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் ரெயிலை விட்டு இறங்கினார். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ரெயில் பயணத்தின் போது இந்த கொள்ளை சம்பவம் நடந்ததை தொடர்ந்து ஜான் வினோத்காந்த் தனது கேரள பயணத்தை ரத்து செய்து விட்டு, மனைவி மற்றும் மகளுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்