ராமேசுவரத்தில் பலத்த மழை; கடல் சீற்றம்

ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் பாம்பன், மண்டபத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

Update: 2018-12-22 22:00 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை நேற்று பகலிலும் நீடித்தது. சில நேரம் பலத்த மழையாகவும் பெய்தது.

இதனால் நடராஜபுரம், மாரியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் தெரு, லட்சுமண தீர்த்தம், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அப்துல்கலாம் மணிமண்டபம், தென்குடா ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இதேபோல ராமேசுவரம் கோவிலில் அம்மன் சன்னதி, கொடிமரம் பகுதியிலும் மழைநீர் தேங்கி நின்றது. அங்கு மழை நீர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடல் நேற்று வழக்கத்தை விட சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ரெயில்வே தண்டவாள பகுதி வரை வந்தன.

ராமேசுவரம் பகுதியில் மழை பெய்தபோதிலும் மீனவர்கள் வழக்கம்போல நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மேலும் செய்திகள்