மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக மழை அதிகபட்சமாக சிதம்பரத்தில் 35 மில்லி மீட்டர் பதிவு

மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 35 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Update: 2018-12-23 22:15 GMT
கடலூர், 

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென்தமிழகம், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கடலூரில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. அதன்பிறகு இரவில் கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் மழை நீடித்தது. அவ்வப்போது மிதமானதாகவும், கனமழையாகவும் பெய்த வண்ணம் இருந்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையில் நனைந்தும், சிலர் குடைபிடித்தபடியும் நடந்து சென்றனர். சாலையோர கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உழவர் சந்தை சேறும், சகதியுமாக இருந்தது. தொடர் மழையால் உழவர் சந்தையில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 35 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 16.78 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

கொத்தவாச்சேரி - 32, அண்ணாமலைநகர் -31, சேத்தியாத்தோப்பு- 30, புவனகிரி- 27, ஸ்ரீமுஷ்ணம் -25.40, பரங்கிப்பேட்டை- 23, காட்டுமன்னார்கோவில்- 22, வடக்குத்து- 19, குறிஞ்சிப்பாடி- 17, கடலூர்-15.80, வானமாதேவி- 15.40, கடலூர் கலெக்டர் அலுவலகம்- 14, லால்பேட்டை -13.80, கீழசெருவாய் - 13, மே.மாத்தூர்- 13, குடிதாங்கி- 12.50, காட்டுமயிலூர்-12, குப்பநத்தம்- 11, வேப்பூர்-11, பெலாந்துறை- 7.20, தொழுதூர்-7, விருத்தாசலம்- 5.30, லக்கூர்-4, பண்ருட்டி-3.

மேலும் செய்திகள்