திருவண்ணாமலையில் மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-24 23:00 GMT

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்திற்கு வரும் மக்களிடம் மண்எண்ணெய், பெட்ரோல், வி‌ஷம் போன்றவை உள்ளதா? என்று தீவிர சோதனைக்கு பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்க கீழ்பென்னாத்தூர் அருகில் கரிகுலாம்பாடி பகுதியை சேர்ந்த பாண்டு என்பவரது மனைவி சவுரியம்மாள் (வயது 62) என்பவர் வந்திருந்தார்.

கலெக்டர் அலுவலகம் முன்பு, அவர் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து, அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவரது நிலத்தை கீழ்பென்னாத்தூர் தாசில்தார் வேறு ஒருவருக்கு எழுதி கொடுத்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார், திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்