தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு 2 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் 2 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-24 21:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். பொதுமக்கள் பலர் கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

அப்போது ஒரு சிறுவனுடன் 3 பெண்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைமேடையில் அமர்ந்து இருந்தனர். திடீரென அந்த 3 பெண்களும் தாங்கள் கொண்டு வந்த மஞ்சப்பையில் தண்ணீர் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தங்கள் மீது ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை அறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்களிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை வாங்கினர். பின்னர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் வடலிவிளையை சேர்ந்த கணபதி மனைவி கிருஷ்ணம்மாள், அவரின் மகள்கள் சண்முகசுந்தரி, ஜெயமீனா மற்றும் சண்முகசுந்தரியின் 5 வயது மகன் என்பது தெரியவந்தது.

சண்முகசுந்தரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கை அவரின் தந்தை மற்றும் குடும்பத்தினர் சண்முகசுந்தரியிடம் இருந்து பிரித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி, சண்முகசுந்தரி நாசரேத் போலீஸ் நிலையத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளார். அதே போல் சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு எங்களை மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும். என்னுடன் கார்த்திக்கை சேர்த்து வைக்க வேண்டும். இதுதொடர்பாக சண்முகசுந்தரி மனு கொடுக்க வந்தது தெரியவந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் மனு கொடுக்க வருபவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் தான் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

ஆனால் போலீசாரின் கவனக்குறைவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக இருக்க வேண்டும் என்று ‘ஹலோ போலீஸ்‘ என்ற சேவையை தொடக்கி வைத்தார். இதிலும் சண்முக சுந்தரி பல முறை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்து உள்ளார்.

ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்