கொடைக்கானலில் கடும் பனிமூட்டம்

கொடைக்கானலில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.

Update: 2018-12-24 22:15 GMT
கொடைக்கானல், 

கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். இதனால் கொடைக்கானலில் நிலவும் குளு,குளு சீசனை அனுபவிக்க, சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதன்படி நேற்றும் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு குவிந்த வண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சில பகுதிகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

இதற்கிடையே நகரில் அவ்வப்போது சாரல் மழை பெய்தபடி இருந்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் போதிய வெளிச்சம் இல்லாமல் போனது. எனவே, வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. இதனால் சுற்றுலா இடங்களுக்கு விரைவாக செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர்.

ஏற்கனவே குளிர் நிலவி வரும் நிலையில் சாரல் மழையும் பெய்ததால் கடும் குளிர் நிலவியது. எனினும், அதை பொருட்படுத்தாமல் சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள், கொடைக்கானலின் இயற்கை அழகை ரசித்தனர். அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்