கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் - தஞ்சையில், அர்ஜூன் சம்பத் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என தஞ்சையில் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2018-12-24 22:45 GMT
தஞ்சாவூர்,

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் அந்த கட்சியினர் தென்னங்கன்றுகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். ஆனால் தென்னங்கன்றுகளை அலுவலகத்தின் உள்ளே கொண்டு செல்ல போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதனால் தென்னங்கன்றுகள் இல்லாமல் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், கஜா புயலால் 1 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிக விலை கொடுத்து தேங்காய் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சீர் செய்யும் வகையில் தற்போது பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு பதிலாக புதிதாக தென்னங்கன்றுகளை தமிழக அரசு இலவசமாக வழங்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயலால் சாய்ந்த தென்னை மரங்களை தமிழக அரசே அகற்றி கொடுக்க வேண்டும். தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும். தென்னங்கன்றுகள் வளர்ந்து பலன் அளிக்க 5 ஆண்டுகள் ஆகும். அதுவரை மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும். புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த மக்களை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறியபோது, இலவசமாக மண்எண்ணெய் வழங்கப்படும் என கூறினார். மக்கள் தற்போது மண் எண்ணெய் பயன்படுத்துவது கிடையாது. அதற்கு பதிலாக புயலால் பாதித்த மக்களுக்கு கியாஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்