கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - நல உதவிகளை கலெக்டர் வழங்கினார்

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் நல உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

Update: 2018-12-25 23:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 275 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து எலும்பு நோய் சிகிச்சை பெறுவதற்காக மகராஜகடை கிராமத்தை சேர்ந்த மாணவி தீபிகாவிற்கு ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையும், மல்லப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணவன் நாசிப் என்பவருக்கு கல்வி செலவினத்திற்காக ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலையும், மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கீதா என்பவருக்கு சிறுநீரக சிகிச்சை பெற ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கினார்.

இதே போல தாட்கோ சார்பில் தேசிய துப்புரவு பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு கழக பருவக்கடனாக கிருஷ்ணகிரி ராசி வீதியை சேர்ந்த முருகம்மாள், பேபி ஆகியோருக்கு தையல் கடை வைப்பதற்காக தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், என மொத்தம் 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 30-க்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.தொடர்ந்து ரெட்கிராஸ் சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் கஜா புயலில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பாக பணியாற்றிய ரெட்கிராஸ் உறுப்பினர்கள் 14 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பிரபாகர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட பிற்பாட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், உதவி ஆணையர்(ஆயம்) முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தாட் கோ மாவட்ட மேலாளர் (பொறுப்பு) ராஜகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்