திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து நாமக்கல் வரை அகலப்படுத்த நடவடிக்கை விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து நாமக்கல் வரை உள்ள சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது.

Update: 2018-12-25 22:38 GMT
திருச்சி,

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி-சேலம் சாலை அகலம் குறைந்த, அதே நேரத்தில் குறுகலான வளைவுகள் அதிகம் உள்ள சாலையாகும். இதனால் இந்த சாலையில் அதிக விபத்துக்கள் அடிக்கடி நடந்து உள்ளன. எனவே இந்த சாலையில் உள்ள குறுகலான வளைவுகளை நேர் செய்து, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் திருச்சி-சேலம் சாலையில் திருச்சியில் இருந்து நாமக்கல் வரை சாலை அகலப்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (என்.எச்.ஏ.ஐ) இந்த சாலையை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முசிறியில் இருந்து நாமக்கல் வரை மட்டும் உள்ள சாலையை அகலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி-சேலம் சாலையை பொறுத்தவரை திருச்சியில் இருந்து முசிறி வரையில் உள்ள பகுதியில் தான் அதிக விபத்துகள் நடந்து உள்ளன. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களின் போக்குவரத்தும் அதிக அளவில் இருக்கிறது. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி திருச்சியில் இருந்து நாமக்கல் வரை இந்த சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்