நீலப்புரட்சி திட்டத்தால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு நாராயணசாமி வேதனை

நீலப்புரட்சி திட்டத்தால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-12-26 23:15 GMT
புதுச்சேரி, 

சுனாமியினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை கடற்கரையில் நடந்தது. தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சுனாமி தாக்கியபோது புதுவை, காரைக்காலில் பலர் பலியானார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்காக அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மராட்டிய மாநில அரசு சார்பிலும், புதுவை அரசு சார்பிலும் வீடுகள் கட்டித்தரப்பட்டன.

மத்திய அரசு இப்போது நீலப்புரட்சி திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கார்ப் பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். மீன்பிடி தொழிலே அறியாதவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் பாரம்பரிய மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த திட்டத்தின் மூலம் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய திட்டங்கள் முடக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு நிதி, மழைக்கால நிதி போன்றவற்றை தடுத்து வருகிறது. மத்திய அரசு தனது பட்ஜெட்டில் மீனவர்களுக்கு நிதி ஒதுக்கினாலும் அதை மீனவர்களுக்கு வழங்குவதில்லை. இருப்பினும் நாங்கள் மீனவ நண்பனாக இருந்து புதுச்சேரி, காரைக்கால் மீனவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்