வாடகை வாகன வரியை ஆன்லைனில் செலுத்த வேண்டும் - வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல்

1-ந் தேதி முதல் வாடகை வாகன வரியை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-26 22:00 GMT
சிவகங்கை, 

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் கூறியதாவது:- வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகனங்களுக்கான கட்டணம், ஓட்டுனர் உரிம கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் ‘ஆன்லைன்‘ மூலம் வசூலிக்கப்படுகின்றன.

இதில் வாடகை வாகனங்களுக்கான வரி மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வங்கி வரைவு காசோலை மூலம் பெறப்பட்டு வந்தன. அந்த வரியும் வருகிற 1-ந்தேதி முதல் ‘ஆன்லைன்‘ மூலம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது பதிவு சான்று, அனுமதி சீட்டு, வாடகை வாகன ஆவணங்களின் நகல்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதியப்பட்டு வருகின்றன.

இந்த மாதம் 31-ந்தேதி வரை வாடகை வாகன வரியை வங்கி வரைவு காசோலை மூலம் வசூலிக்கப்படும். மேலும் வாடகை வாகன விவரங்கள் குறித்து தகவல் விடுபட்டால் ‘ஆன்லைனில்‘ வரி செலுத்த முடியாது. இதனால் ஓட்டுனர்கள், வாகன விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்