கிருஷ்ணகிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-26 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சேதுராமன் கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி பேசினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்ட மாறுதலை ஒரே சமயத்தில் நடத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் 50 சதவீதம் பெண்கள் இருப்பதால், சுகாதார வளாகம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். வாடகை கட்டடத்திற்கு பணம் வழங்க வேண்டும்.

கணினி சான்றுகள் வழங்கியதற்கு பணம் வழங்க வேண்டும். அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். புதிய கிராம நிர்வாகத்துறையை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்பது உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:- கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பெரும்பான்மையுள்ள தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தொடர் போராட்டம் நடத்துவது எனவும், தமிழகத்தில் 7 ஆயிரத்து 500 உறுப்பினர்களை கொண்டுள்ள சங்கம் என்பதால் காலவரையற்ற போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் வாபஸ் என்ற செய்தி உண்மையில்லை என்பதையும் தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். முடிவில் வட்ட துணைத் தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்