கடலூர், பரங்கிப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

கடலூர், பரங்கிப்பேட்டையில் திருமண உதவித்தொகை வழங்குவதற்கு தலா ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-12-26 22:15 GMT
கடலூர்,

கடலூர் முதுநகர், பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அவுஸ்அமீது(வயது 55). இவர், தனது மகள் ஜிவேரியாபானுவுக்கு தமிழக அரசின் திருமண உதவித்தொகையுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை கேட்டு கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அப்போது அங்கே விரிவாக்க அலுவலராக பணிபுரிந்து வந்த தெய்வசிகாமணி(58) என்பவர், திருமண உதவித்தொகை வழங்க வேண்டுமானால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று அவுஸ்அமீதுவிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

பணத்தை தருவதாக கூறிவிட்டு வந்த அவுஸ் அமீது இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் அவுஸ் அமீது நேற்று காலை கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த தெய்வசிகாமணியிடம் பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கியதும் அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு தெய்வசிகாமணியை கைது செய்து கடலூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். வருகிற ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தெய்வசிகாமணி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர், எம்.ஜி.ஆர். சாலையை சேர்ந்தவர் ஷேக்அமீது(58). இவர் தனது மகள் ரேஷ்மா பேகத்துக்கு திருமண உதவித் தொகை கேட்டு பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட விரிவாக்க அலுவலர் பானுமதி(58) திருமண உதவித்தொகை வழங்க வேண்டுமானால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷேக் அமீது பணத்தை தருவதாக அதிகாரியிடம் கூறிவிட்டு இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

லஞ்சம் கேட்ட பெண் அதிகாரியை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் ஷேக் அமீது ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று காலை பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த பானுமதியிடம் கொடுத்தார்.

பணத்தை வாங்கியதும் அங்கே மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாவட்டத்தில் ஒரே நாளில் லஞ்சம் வாங்கியதாக 2 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து இருப்பது அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்