குடியாத்தம் அருகே தொடர்ந்து அட்டகாசம்: மிரள வைக்கும் காட்டுயானைகள் - மா மரங்கள் அடியோடு நாசம்

குடியாத்தம் அருகே காட்டு யானைகள் மீண்டும் தோட்டங்களுக்குள் புகுந்து மாமரங்களை அடியோடு சாய்த்தன. மிரள வைக்கும் யானைகளால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Update: 2018-12-26 23:42 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் அருகே சைனகுண்டா, கொட்டமிட்டா போன்ற மலைகிராமங்கள் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளன. இங்கு வனப்பகுதியையொட்டி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான தோப்புகளில் மாமரங்கள் வாழை மரங்களை பராமரித்து வருகின்றனர். ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள யானைகள் அடிக்கடி இங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து விடுகின்றன.

வழக்கமாக கோடைகாலத்தில் தான் இவற்றின் அட்டகாசம் அதிகமாக இருக்கும். அதற்குள் விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்து விடுவர். ஆனால் இப்போது கோடைகாலம் தொடங்குவதற்குள்ளேயே யானைகள் விவசாய நிலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டன.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொட்டமிட்டா பகுதியில் பாபு என்பவரது நிலத்தில் புகுந்து 40 மாமரங்களை சாய்த்தன. மேலும் உஸ்மான் என்பவருக்கு சொந்தமான 10 மாமரங்களையும், காசி என்பவரது வாழை மரங்களையும் அடியோடு நாசப்படுத்தின. குலைதள்ளிய நிலையில் இருந்த வாழைத்தார்களை அவை தின்று தீர்த்தன.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்ட தொடங்கினர். அந்த யானைகள் வனப்பகுதியை நோக்கி ஓட்டம் பிடித்தன. அடர்ந்த வனப்பகுதிக்குள் அவை சென்று விட்டது என நினைத்து வனத்துறையினர் திரும்பிவிட்டனர். ஆனால் அதே பகுதியில் பதுங்கியிருந்த 11 காட்டு யானைகள் 2-வது நாளாக கொட்டமிட்டா பகுதிக்கு படையெடுத்தன. அவை ஏற்கனவே நாசப்படுத்திய பாபு என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து எஞ்சிய 45 மாமரங்களையும் தலையால் முட்டித்தள்ளி அடியோடு சாய்த்தன. அதேபோல் விஜயன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து 10 மாமரங்களை சாய்த்து தள்ளின.

அந்த யானைகள் இரவு முழுவதும் பயங்கர சத்தத்துடன் பிளிறிக்கொண்டே இருந்தன. பொதுமக்கள் அங்கு செல்ல முடியாமல் கலக்கத்துடனேயே இருந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். யானைகள் மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுவதால் அவற்றை நிரந்தரமாக விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இன்னும் 3 மாதத்திற்குள் மா சீசன் தொடங்க உள்ளது. மரங்களில் கொத்துக்கொத்தாக காய்கள் காய்த்துள்ளன. அவற்றை பறித்து விவசாயிகள் மண்டிகளுக்கு அனுப்பி லாபம் சம்பாதிக்கலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் சில மணி நேரத்துக்குள் அவற்றை யானைகள் சாய்த்து நாசமாக்கி விட்டதால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் கூறுகையில், “நாங்கள் இரவு, பகல் பாராமல் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். வங்கி கடன், வட்டிக்கு பணம் என பல்வேறு வகையில் பணத்தை திரட்டி செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். நன்கு விளைந்தவுடன் இவற்றை மார்க்கெட்டில் விற்று பணத்தை ஈட்டலாம் என நினைத்த நேரத்தில் யானைகள் இவற்றை நாசப்படுத்தியதால் கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே யானைகள் இனி நிலங்களுக்குள் புகுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும். எங்களுக்கு வனத்துறையினர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்த நிலையில் வனத்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறையினர் யானைகள் சேதப்படுத்திய மரங்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்