புயல் பாதிப்புகளை முறையாக கணக்கெடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

கோட்டூர் அருகே புயல் பாதிப்புகளை முறையாக கணக்கெடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-27 22:30 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்காத தாசில்தாரை கண்டித்தும், புயல் பாதிப்புகளை முறையாக கணக்கெடுக்காத கிராம நிர்வாக அதிகாரிகளை கண்டித்தும் நேற்று குறிச்சி பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் சுப்ரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மன்னார்குடி- முத்துப்பேட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகை வழங்கவில்லை என கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் நிவாரண பொருட்களை வழங்க ஆவண செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி- வடசேரி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்