கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தை அவசரமாக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டில் முறையீடு

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தை அவசரமாக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டில் நேற்று முறையிடப்பட்டது.

Update: 2018-12-27 22:15 GMT
மதுரை, 


மதுரை ஐகோர்ட்டில் நேற்று விடுமுறை கால வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதிகள் நிர்மல்குமார், சரவணன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது வக்கீல் நீலமேகம் என்பவர் ஆஜராகி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துறையினரின் அலட்சியத்தால்தான் இந்த தவறு நடந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும்.

இந்த தவறுக்கு ரத்த வங்கிகளில் தற்காலிக பணியாளர்களை நியமித்தது தான் காரணம். இதுபோன்ற தவறுகள் இனி ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து, தன்னுடைய மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க தேவையில்லை. விடுமுறை காலத்துக்கு பின்னர், மனுதாரர் ஐகோர்ட்டை அணுகலாம்“ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்