பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய 65 கண்காணிப்பு குழுக்கள் - கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய 65 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

Update: 2018-12-28 22:15 GMT
தேனி,

தமிழக அரசு வருகிற 1-ந்தேதியில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தவும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தாமாக முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் சிலர் அரசு உத்தரவுக்கு எதிராகவும், சட்டத்துக்கு புறம்பாகவும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய 65 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த குழுவினர் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். எனவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை மக்கள் முற்றிலும் தவிர்க்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் குமரவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராம்பிரதீபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்