வேளாண் எந்திரங்களை பெறுவதற்கு விவசாயிகள் ‘உழவன்’ செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் அன்பழகன் தகவல்

வேளாண் எந்திரங்களை பெறுவதற்கு விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2018-12-28 22:15 GMT
குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மி.மீ ஆகும். நுண்ணீர் பாசன இயக்கத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறைக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

வேளாண் எந்திரமயமாக்கல் திட்டத்தில் டிராக்டர், ரோட்டவேட்டர், பவர்வீடர், பவர்டில்லர், தீவனப்புல் வெட்டும் கருவி மற்றும் வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைத்தல் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் வேளாண் எந்திரங்களை பெறுவதற்கு விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்னுரிமை பதிவு செய்ய வேண்டும்.

கரூர் மாவட்டம், இராயனூரில் குளிர்பதன கிடங்கு அமைந்துள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து பயன்பெறலாம். விவசாயிகள் பயன்பெறும் வகையில் “உழவன்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் மானிய திட்டங்களை தானே பதிவு செய்து பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

கூட்டத்தில் மாவட்ட வன அதிகாரி அன்பு, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜெயந்தி, கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மோகன்ராம், உதவி இயக்குனர்கள், அனைத்து துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்