கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு மாற்றிடம் வழங்க கோரிக்கை

கோத்தகிரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு மாற்றிடம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-12-28 22:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்டு அரக்கோடு, தேனாடு, ஜக்கனாரை, கடினமாலா, கெங்கரை, கோடநாடு, தெங்குமரஹாடா, கொணவக்கரை, நடுஹட்டி, நெடுகுளா, குஞ்சப்பனை ஆகிய 11 ஊராட்சிகள் உள்ளன. இந்த 11 ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக ஊராட்சி செயலர்கள் இல்லை.

சில ஊராட்சிகளில் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பெரும்பாலும் ஒரு ஊராட்சி செயலர் 2 ஊராட்சிகளின் பணிகளை கவனித்து கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பணிப்பளு அதிகரிப்பதுடன், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் அன்றாட பணிகளான குடிநீர் வினியோகம், குப்பைகளை அப்புறப்படுத்துதல் போன்ற பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

ஊராட்சி செயலர்கள் வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை, பணி உத்தரவு உள்பட பல்வேறு ஆவணங்களில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கவும், அவர்களது சில பணிகளை மேற்கொள்ளவும் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு கோத்தகிரி காந்தி மைதானத்துக்கு அருகில் செயல்பட்டு வரும் ஒன்றிய அலுவலகத்துக்கு ஊராட்சி செயலர்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால் அலுவலகத்தில் அவர்கள் அமர்ந்து பணிபுரிய குறுகலான ஒரு சிறிய அறை மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் 2 ஊராட்சி செயலர்கள் மட்டுமே அமர்ந்து பணிபுரியும் வகையில் அந்த அறை இருக்கிறது.

மேலும் மழைக்காலத்தில் அறையில் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் ஊராட்சி செயலர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஊராட்சி செயலர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன. எனினும் பல்வேறு பணிகளுக்காக ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று, வர வேண்டியுள்ளது. ஆனால் அங்கு போதிய வசதி அவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. தண்ணீர் வழிந்தோடும் குறுகலான சிறிய அறையில் அமர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவலம் காணப்படுகிறது. எனவே ஒன்றிய அலுவலகத்தில் விசாலமான அறையை ஊராட்சி செயலர்களுக்கு பணிபுரிய ஒதுக்க வேண்டும் அல்லது மாற்றிடம் வழங்க வேண்டும். மேலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்