புயல் நிவாரண பொருட்களை ஏற்றி செல்ல முயன்ற வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருவாரூர் அருகே புயல் நிவாரண பொருட்களை ஏற்றி செல்ல முயன்ற வாகனத்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-29 22:27 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை அறிவித்து வழங்கி வருகிறது. இதில் பல கிராமங்களில் சரி வர வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் அருகே உள்ள கூடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூடூர், நாரணமங்கலம், காட்டாற்றுபாலம், கீழக்கூத்தங்குடி ஆகிய பகுதிகளில் இதுவரை நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை. இந்த பகுதிக்கான நிவாரண பொருட்கள் கூடூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று நிவாரண பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முற்பட்டனர். இதனை அறிந்த கிராம மக்கள் நிவாரண பொருட்களை ஏற்றி செல்ல வந்த வாகனத்தை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது 44 நாட்கள் ஆகியும், நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்