கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது

கண்மாய்களில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2018-12-29 22:45 GMT
மதுரை, 

மதுரை உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு 2 ஆயிரத்து 354 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசம்போது, “தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.1,180.45 கோடி மதிப்பீட்டில் 34 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.63.21 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 82 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வரை தாலிக்கு தங்கம் திட்டத்தின்கிழ் 10 லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 65 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 65 ஆயிரத்து 931 பெண்கள் பலன் அடைந்துள்ளனர்” என்றார்.

முன்னதாக மாநகராட்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சி மாடக்குளம் முனியாண்டி கோவில் தெரு மற்றும் கபாலீஸ்வரி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் 3 பகுதிகளில் ரூ.12 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. குடிமராமத்து பணிகள் மேற்கொண்ட காரணத்தினால் தமிழகம் முழுவதும் கண்மாய்களில் நீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட மாடக்குளம் கண்மாயில் தற்போது 15 அடிக்கு நீர் நிரப்பப்பட்டுள்ளது. அதன்மூலம் இந்த பகுதி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதி முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த பகுதிகளில் 350 அடியில் தான் தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது 120 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலம்-4 உதவி கமிஷனர் பிரேம்குமார், செயற்பொறியாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்