பழந்தின்னிப்பட்டிபுதூர் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா திறந்து வைத்தனர்

பழந்தின்னிப்பட்டி புதூர் கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2018-12-30 22:30 GMT
ராசிபுரம், 

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழந்தின்னிப்பட்டிபுதூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர்கள் 11 பயனாளிகளுக்கு ரூ.17.25 லட்சம் கடன் உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:- கிராமங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் அரசு திட்டங்களை பெறும் வசதி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சான்றிதழ்கள் இணையதள சேவையை பயன்படுத்தி பெறும் வசதிகளை செய்துள்ளது. பழந்தின்னிப்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடமானது நகர்ப்புறத்தில் உள்ள தனியார் வங்கிகளை விட நவீனமயமாகவும், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நவீனமாக கட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கங்களின் இணைப் பதிவாளர் பாலமுருகன், ராசிபுரம் நகர அ.தி.மு.க.செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்கள் தாமோதரன், காளியப்பன், இ.கே.பொன்னுசாமி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் சுரேஷ்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பிரகாசம், கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அத்தனூர் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கும், பழந்தின்னிப்பட்டி, ஓ.சவுதாபுரம், அலவாய்ப்பட்டி, மின்னக்கல், பொன்பரப்பிபட்டி, மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை மேம்படுத்தல் பணிகளையும் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் செய்திகள்