செஞ்சி அருகே, பக்கத்து வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டதால் தந்தை அடித்துக் கொலை

செஞ்சி அருகே பக்கத்து வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டதால் தந்தையை அடித்துக் கொலை செய்த சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-12-31 22:00 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை(வயது 68). இவருடைய மகன் பார்த்திபன் (28). சமையல் தொழிலாளி. 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பார்த்திபன் அவரது தந்தைக்கு சரியாக உணவு வழங்காமலும், பணம் எதுவும் கொடுக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாவாடை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார். இதை பார்த்திபன் கண்டித்தார். இருப்பினும் பாவாடை, வயிற்றுப்பசிக்காக வேறு வழியின்றி அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மதுகுடித்துவிட்டு பார்த்திபன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த அவரது தந்தையிடம், மற்ற வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார். அதற்கு பாவாடை, நீயும் உணவு தரமாட்டாய், உணவு தயார் செய்ய பணமும் தரமாட்டாய்?, வயிற்றுப்பசிக்கு நான் என்ன செய்வது? என்று கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன், பாவாடையை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் பாவாடைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர், பாவாடையை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாவாடை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்