திருமானூரில் உயிர்பலி வாங்கும் மணல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருமானூரில் உயிர்பலி வாங்கும் மணல் குவாரியை மூடக்கோரி நேற்று அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-12-31 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரில் உள்ள மணல் குவாரி அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாத்தா-பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதற்கு கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு மணல் எடுத்ததால் ஆழமான பள்ளம் ஏற்பட்டு அதில் தேங்கிய நீரில் மூழ்கி அவர்கள் உயிரிழந்தனர் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆகவே, உயிர்பலி வாங்கும் மணல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரியும், இந்த பகுதியில் நீரில் மூழ்கி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், திருமானூரில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை திரும்ப பெறக்கோரியும் திருமானூர் கிராம மக்கள் மற்றும் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தனபால், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தங்கஜெயபாலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் சமூக ஆர்வலர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மணல் குவாரியை நிரந்தரமாக மூடும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அப்போது அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்