ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி; பொதுமக்கள் சாலை மறியல் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

வெள்ளியணை அருகே ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-31 22:15 GMT
வெள்ளியணை,

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜெகதாபி ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ரெங்கன்(வயது 65). இவர் நேற்று இரவு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து ஜெகதாபி- மணப்பாறை சாலையில் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ரெங்கன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்து அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள், அடிக்கடி விபத்து ஏற்படும் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வெள்ளியணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் முகமதுஜாபர் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் ரெங்கனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்