தேனி டிரைவரை தாக்கி கார் கடத்தல் வாலிபர் கைது

தேனியை சேர்ந்த டிரைவரை தாக்கி காரை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-31 22:15 GMT
வேடசந்தூர், 

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 26). இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் வரதராஜனிடம் திண்டுக்கல்லுக்கு செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று வாலிபர் ஒருவர் கூறினார். இதையடுத்து வாடகை பேசி அந்த வாலிபரை, காரில் அழைத்து கொண்டு திண்டுக்கல் நோக்கி வரதராஜன் சென்றார்.

அந்த கார் திண்டுக்கல்லுக்கு வந்ததும், வேடசந்தூர் அருகேயுள்ள மற்றொரு கிராமத்துக்கு செல்ல வேண்டும் என்று வாலிபர் கூறினார். அதற்கு கூடுதல் வாடகை தருவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வேடசந்தூர் நோக்கி கார் சென்றது. இந்த நிலையில் தண்ணீர்பந்தம்பட்டி பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது.

அப்போது அந்த வாலிபர் சிறுநீர் கழிப்பதற்கு, காரை நிறுத்தும்படி கூறினார். உடனே டிரைவர் வரதராஜன், ஒரு குளத்தின் அருகே காரை நிறுத்தினார். பின்னர் 2 பேரும் காரில் இருந்து கீழே இறங்கினர். அப்போது திடீரென அந்த வாலிபர், வரதராஜனை தாக்கி கீழே தள்ளினார். மேலும் காரை அங்கிருந்து கடத்தி சென்று விட்டார்.

இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் வரதராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது எரியோடு-திண்டுக்கல் சாலையில் வரதராஜனின் கார் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜீப்பில் துரத்தி சென்று காரை மடக்கினர். மேலும் காரை கடத்திய திண்டுக்கல் அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த கனகபாண்டியை (24) கைது செய்தனர். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்